பழனிசாமி செய்தது எல்லாம் துரோகம் தான்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரெயில் கேட்டா கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாங்க என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இன்றைய நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு அடித்தளமான தந்தை பெரியாரை தந்த இந்த ஈரோட்டுக்கு, திராவிட இயக்கத்தின் முதன்மைத் தொண்டனான நான் பெருமையோடு இங்கே வந்திருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை மாபெரும் மாநாட்டைப் போல ஏற்பாடு செய்திருக்கின்ற அவருக்கும், அவருக்குத் துணை நிற்கும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ். கந்தசாமி அவர்களுக்கும், அதுபோல மாவட்டத்தின் அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஈரோட்டுப் பூகம்பம் தந்தை பெரியார் இல்லையென்றால், திராவிட இயக்கம் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை; ஏன், தமிழ்நாட்டிற்கு இந்தளவுக்கு வளர்ச்சியும் இருந்திருக்காது.
ஈரோட்டைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது, மஞ்சள் நகரம்,சந்தன நகரம், தொழில் நகரம் ஜவுளி நகரம்! கைத்தறி நகரம் இயற்கை நகரம்! விடுதலை வீரர்களைத் தந்த நகரம்! இத்தகைய பெருமைமிகு ஈரோட்டில், இந்த அரசு விழாவை சிறப்பாக மிகுந்த சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கிறார் நம்முடைய கழகத்திற்கு கிடைத்த ‘நல்லமுத்து’ மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்கள் அமைதியானவர் அடக்கமானவர்அதே நேரத்தில், ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிப்பதில் ஆற்றல்மிக்கவர்இரண்டே வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், அனுபவத்தால் மூத்தவர் உழைப்பினால் இளைஞர்
இப்படி நாம் தினந்தோறும் தொடர் திட்டங்களைத் செயல்படுத்துவதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன சொல்வது என்று தெரியாமல், விரக்தியில் பிரம்மைப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நான் பேசும் போது,
சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட - ‘பால்வளத் தந்தை’ சி.கு.பரமசிவம் அய்யா அவர்களின் திருவுருவச் சிலை ஈரோடு பால்பண்ணையில் நிறுவப்படும்" என்று அறிவித்தேன்.
விவசாயக் குடும்பங்களின் வருவாயை உயர்த்த, பால் விநியோக முறையை நவீனப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அவர். தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், கூட்டுறவு பால் சங்கங்கள், பால் செயலாக்கக் கட்டமைப்புகள் அனைத்துமே அவர் விதைத்த விதையின் விளைச்சல்.
அத்தகைய பெரும் ஆளுமைக்கு நன்றி செலுத்த சொன்னபடியே, சித்தோடு பால்பண்ணை வளாகத்தில் அவருடைய திருவுருவச் சிலையை நிறுவி இருக்கிறோம்.
தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இந்த மண்டலத்துக்கு இதுபோன்ற செயல்களைச் செய்திருக்கின்றாரா? அப்படி என்று நான் கேட்க விரும்பவில்லை. அவர் செய்தது எல்லாம் என்ன? வெறும் துரோகம்தான். பச்சைத் துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பழனிசாமி அவர்கள் பச்சைத் துரோகம் செய்கிறார் என்று நான் சொன்னதும், அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
“நான் ஒரு விவசாயி, இப்போதும் விவசாயம் செய்கிறேன்” என்று சொல்கிறார் பழனிசாமி. அவர் ஒரு துரோகி, இப்போதும் தொடர்ந்து துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லலாமே தவிர, அவரை விவசாயி என்று சொல்வது உண்மையான உழவர் பெருமக்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகிவிடும்.
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு நிராகரித்துவிட்டார்கள்.
பழனிசாமி அவர்கள் உண்மையான விவசாயியாக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்? பிரதமர் அவர்களே மோடி அவர்களே தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்கவேண்டும் பிரதமர் மோடி அவர்களே என்று அவர் சொல்லி இருக்க வேண்டுமா? வேண்டாமா? டெல்லியில் பல கார்களில் மாறி, மாறி சென்று யார் யாரையோ சந்திக்கிறீர்களே
தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்க பிரதமரை சந்திக்கிறேன் என்று சொல்லுங்கள்… நீங்கள் சொன்னால் போதும்…. தமிழ்நாடு அரசு சார்பில், நானே உங்களுக்கு காருக்கு ஏற்பாடு செய்து அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல வண்டியாக ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன். பழனிசாமி அவர்கள், இந்த மேற்கு மண்டலத்திற்கு இழைத்த பச்சைத் துரோகப் பட்டியலில், லேட்டஸ்ட் அடிஷன் கோவை மெட்ரோ ரெயில் துரோகம்.
சென்னையை போல, கோவை, மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கும், மெட்ரோ ரெயில் தேவை என்று நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதையும் நிராகரித்திருக்கிறது.
2011 மக்கள்தொகையை கணக்கில் வைத்து, நிராகரித்திருக்கிறார்கள். இப்போது 2025-ஆம் ஆண்டு சென்சஸ் எடுத்தால் 20 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும்.
இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றி முடிக்கும்போது 2035-ஆம் ஆண்டு ஆகி இருக்கும். வட மாநிலத்தில், 20 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் எல்லாம் மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்து இயக்குகிறார்கள். தமிழ்நாடு என்றால் மட்டும் கம்பி கட்டுகின்ற கதையெல்லாம் சொல்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பா.ஜ.க.
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்' என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதேபோல, பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால், திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால்தான் கோவை, மதுரை மக்களை பா.ஜ.க. பழிவாங்குகின்றது என்று ஒப்புதல் வாக்குமூலமே வழங்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






