பொதுக்குழு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்... திமுகவில் அதிரடி மாற்றங்கள்


பொதுக்குழு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்... திமுகவில் அதிரடி மாற்றங்கள்
x
தினத்தந்தி 30 May 2025 3:48 PM IST (Updated: 30 May 2025 4:48 PM IST)
t-max-icont-min-icon

திமுக பொதுக்குழுவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மதுரை,

மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்குழு நடைபெறும் பந்தலில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. குளு, குளு ஏ.சி.வசதியுடன் இருக்கைகளும், வண்ண விளக்குகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய நிர்வாகிகள் அமரும் மேடை, முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் வர தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவர்களது பெயர்கள் பார்த்து பதிவு செய்து எளிதில் அனுமதி பெற்று பொதுக்குழு அரங்கிற்குள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் பல்வேறு வகையான உணவுகள் சுமார் 3 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது. அரங்கின் முன்பு 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) மதுரை வருகிறார். அதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இருபுறங்களில் தி.மு.க. கொடி அமைக்கப்படுகிறது. மேலும் முதல்-அமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், திமுக பொதுக்குழு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர் மூர்த்தி தலைமையில், திமுக நிர்வாகிகள் பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர். பொதுக்குழு பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. முடிந்துள்ளது. தி.மு.க. பொதுக்குழு கூட்டங்கள் பெரும்பாலும் சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே நடைபெறும். ஆனால் இம்முறை சென்னைக்கு வெளியே மதுரையில் நடைபெற இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது. 1977-க்கு பின் மதுரையில் தற்போதுதான் தி.மு.க. பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழுவில் மேற்கொள்ளப்படும் தீர்மானங் கள் மற்றும் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்புகளும் கூடி இருக்கின்றன.

மதுரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்திருப்பது அவரது அரசியல் நுட்பத்தை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு எந்த சேதமும் வராத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். அதை ஜூன் 1-ந்தேதி நடக்கும் பொதுக் குழுவில் அறிவிப்பார்.

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு காரணமாக மதுரை மக்களிடத்தில் தி.மு.க. கூடுதல் செல்வாக்கு பெற்று உள்ளது. இதை எல்லாம் கணக்கு போட்டு தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் மதுரையில் பொதுக்குழுவை நடத்துகிறார். தி.மு.க. கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டதால் கூட்டணி குழப்பமின்றி தேர்தல் பணியாற்ற எந்த இடையூறும் இருக்க போவதில்லை. இந்த பொதுக் குழுவில் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர், சாட்டையை சுழற்ற போகிறார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. வயது மூப்பால் சரிவர கட்சி பணி செய்ய முடியாதவர்கள். கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உழைக்காதவர்கள் களை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் துணை பொது செயலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இளைஞர்கள்,பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுபற்றி தி.மு.க. தலைவர்கள் மத்தியில் விசாரிக்கும் போது கட்சியின் முக்கிய பொறுப்புகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக இளைஞர்களை தி.மு.க. பக்கம் ஈர்க்கும் வகையிலும், பெண்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையிலும் சில அறிவிப்புகள் வெளிவரலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

1 More update

Next Story