மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கோப்புப்படம்
விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் குளித்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமம், கிழக்குத் தெருவில் வசித்துவரும் பழனி என்பவரின் மகள்கள் சிவசங்கரி (வயது 18), அபினயா (வயது 14) மற்றும் ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 13) ஆகிய மூவரும் இன்று (21.5.2025) காலை அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






