‘கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்’ - ஐகோர்ட்டு உத்தரவு

பொதுநலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
‘கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்’ - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பு நிர்வாகத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கான 730 கோடி ரூபாய் வாடகை பாக்கியை செலுத்துமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வாடகை பாக்கியை செலுத்த தவறினால் ரேஸ் கிளப் நிர்வாகத்தை வெளியேற்றி நிலத்தை அரசு பொதுபாட்டிற்கு பயன்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.

இதையடுத்து ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தோட்டக்கலை சார்பில் பசுமைவெளி பூங்கா, மற்றும் மாநகராட்சி சார்பில் மழைநீரை சேகரிப்பதற்காக 4 குளங்கள் வெட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துக் கொள்வதை எதிர்த்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுநலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் திட்டங்கள் தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீர் சேமிப்பு குளங்கள் அமைத்தல் உள்பட பொதுநலன் கருதி தொடங்கப்பட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று தெரிவித்து, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால் இந்த திட்டங்கள் அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com