கரூர் சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


கரூர் சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 2 Oct 2025 6:59 PM IST (Updated: 2 Oct 2025 7:09 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தருமபுரி,

தருமபுரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கரூர் சம்பவத்துக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் அவர் பேசியதாவது;

”கரூர் சம்பவத்தால் நாடே அதிர்ந்துபோனது. இந்தியாவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் சார்பில் எத்தனையோ பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் எங்கும் இல்லாத வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்கு பிறகு தமிழகம் தலைகுணிந்து நிற்கிறது. மிகப்பெரிய சோகம், துயர சம்பவம் நடந்துள்ளது.

இதற்கு ஆட்சியாளர்களே காரணம். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்கள் ஏன் உரிய காவல் பாதுகாப்பு இல்லை? இன்றைய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் திமுக அரசுதான். மக்களை காக்கின்ற பொறுப்பு அரசையே சாரும். மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை.

துணை முதல்வர் கரூருக்கு வந்து பார்த்துவிட்டு உடனே மீண்டும் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார். கரூரில் பெரிய துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார். அவர் கண்ணில் பயம் தெரிகிறது.

இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி. முதல்வர் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாகுபாடு இன்றி உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுகவினர் தரும் போலி வாக்குறுதிகளை யாரும் நம்ப வேண்டாம். திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story