தொடரும் கனமழை... தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
நெல்லை,
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்து, அத்துடன் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள்ளும் புகுந்தது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (22.11.2025) பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மருதூர் அணைக்கட்டில் 8.5 அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் 6.5 அடியும், கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.9 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது. கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 01 கண் திறக்கப்பட்டு சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








