ஆணவ படுகொலை: ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் - தமிழக அரசு உத்தரவு

பிப்ரவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஆணவ படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆணையத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழனிகுமார், ராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணையம் ஆணவ படுகொலையை தடுப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் ஆகியோரிடம் ஆணையத்தின் உறுப்பினர்கள் கருத்துகளை கேட்க உள்ளனர். மாநிலத்தில் நடந்த ஆணவ படுகொலைகளுக்கான காரணங்கள் உள்ளிட்ட தரவுகளை சேகரித்து, இனி வரும் காலங்களில் ஆணவ படுகொலையை தடுப்பதற்கான பரிந்துரையை வழங்க உள்ளனர். இது தொடர்பான அறிக்கையை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






