விஜய் திமுகவை எப்படி தனியாக வீழ்த்துவார்? - வானதி சீனிவாசன் கேள்வி

கோப்புப்படம்
சினிமா பாடலை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை வஉசி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு கோவை மாநகர பாஜக சார்பில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசனிடம், விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 'ஜனநாயகன்' பாடல் தேர்தல் பிரசார வரிகள் நிறைந்ததாகவும், எல்லா மதங்களையும், எல்லா மொழி பேசுபவர்களையும் இணைப்பது போல இருப்பதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
சினிமா பாடலை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. அரசியலும், சினிமாவும் நெடுங்காலமாக ஒன்றாக பயணித்து வருகிறது. இந்த சூழலில் ஒரு சினிமா நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும்போது, எப்படியாவது அதை தனது அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தான் நினைப்பார். இதை ஒன்றும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கவில்லை.
விஜய் திமுகவை வீழ்த்தப்போவதாக பேசுகிறார். திமுகவை எப்படி அவர் தனியாக வீழ்த்த முடியும்? அதற்கு அவருக்கு என்ன பலம் இருக்கிறது? என்ன திட்டம் இருக்கிறது என்று தெரியவில்லை. திமுக மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. பாடலில் 'ஒன்றாக சேரு, ஒன்றாக சேரு' என்று சொல்கிறார். எல்லா பாஷையும் வேறு வருகிறது. ஆனால் அவர் ஒன்றாக யாருடன் சேரப் போகிறார்? இவ்வாறு அவர் கூறினார்.






