கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு; 2 கத்திகளால் குத்தி கொலை செய்த மனைவி

வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததும், கணவரை அவரது மனைவி குத்திக்கொன்றார்.
ஒரகடம்,
அசாம் மாநில தொழிலாளி இம்ரான் சையத் (வயது 31). இவருடைய மனைவி பரிதாபேகம் (31). இவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இம்ரான் சையத் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நேற்று முன்தினம் காலை படுகாயங்களுடன் கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இம்ரானை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரிதா பேகத்துக்கு ஏற்கனவே இக்பால் என்பவருடன் திருமணம் நடந்து பின்னர் பிரிந்து இருந்த நிலையில் இம்ரான் சையத்துடன் 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இம்ரான் சையத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பரிதா பேகத்துக்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பலமுறை இம்ரானை, பரிதாபேகம் கண்டித்து வந்துள்ளார். ஆனால், அதனை கேட்க மறுத்ததால், தூங்கி கொண்டிருந்த இம்ரானை, பரிதாபேகம் காய் வெட்டும் 2 கத்திகளால் மாறி மாறி அவரது வயிறு, உடல், தலை பகுதியில் குத்தினார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சையத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக ஒரகடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பரிதாபேகம் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






