அன்புமணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் - ராமதாஸ்

தி.மு.க., அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள்.
மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.
இந்த சூழலில், வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து வரும் 20ம் தேதி அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ' அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன், ' எனத் தெரிவித்துள்ளார்.






