பயண அட்டை தொலைந்துபோனால் மீதி தொகையை திரும்பப்பெற முடியாது: மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு

பயண அட்டை தொலைந்துபோனால் மீதி தொகையை திரும்பப்பெற முடியாது என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யவும், வாகன நிறுத்த கட்டணங்களுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
தொலைந்துபோன மெட்ரோ ரெயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் மீதமுள்ள தொகையை எந்த சூழ்நிலையிலும் வேறு அட்டைக்கு மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது. எனவே, பயணிகள் தங்களின் அட்டைகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குனர் கொள்கையின்படி திரும்பப்பெற முடியாது. ஏனெனில் ஒரு அட்டை தொலைந்தால் அது வேறு ஒருவரால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால், ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






