தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா?.. மாபியா ஆட்சியா? - எச்.ராஜா கேள்வி


தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா?.. மாபியா ஆட்சியா? - எச்.ராஜா கேள்வி
x

பாஜக நிர்வாகிகளை போலீசார் வீட்டுக்காவலில் வைத்து வருகின்றனர்.

சென்னை,

ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த சூழலில், அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடுகளின் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

டாஸ்மாக் மதுபான ஊழலை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பாஜகவினருக்கு தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்வது திராவிட மாடல் அரசு மக்களை விட மதுபான விற்பனைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதுபான கொள்முதலில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை சோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக அரசின் மதுபான கொள்முதல் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த தடை விதித்து தடுப்புக் காவலில் கைது செய்யும் ஊழல் திமுக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மதுபான கொள்முதல் ஊழல் மாஃபியாக்களுக்கான ஆட்சியா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story