இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி ஜெயலலிதா: டிடிவி தினகரன் புகழாரம்

சுயநலமிக்க துரோகக் கூட்டத்தை அடியோடு வீழ்த்திட உறுதியேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று.
எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






