திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்: முதல்-அமைச்சர் நடவடிக்கைக்கு உரிமை கொண்டாடும் பாமக, காங்கிரஸ்

திருத்தணி மார்க்கெட் கட்டடத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயர் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
காமராஜர் பெயரில் இயங்கி வந்த திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் அந்தச் சந்தை காமராஜர் பெயரிலேயே இயங்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதார்.
முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கை தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாமகவும், தமிழக காங்கிரஸ் கட்சியும் உரிமை கொண்டாடுகின்றன.
இதுதொடர்பாக, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரால் பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
திருத்தணியில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள சந்தையை, கலைஞர் காய்கறி அங்காடி என பெயரை மாற்ற திருத்தணி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரில் இருப்பதை மாற்ற வேண்டாமென தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தோம்.
அதனை ஏற்று இன்று மேற்படி காய்கறி அங்காடி, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் இயங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசாணையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்று, முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






