விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

'வெல்லும் தமிழ் பெண்கள்' என்று கனிமொழி எம்.பி. தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
திருப்பூரில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து கோவை சென்ற விமானத்தில் திமுக பெண் எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். அதே விமானத்தில், தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் சென்றனர்.
அரசியலில் எதிரும், புதிருமாக இவர்கள் இருந்தாலும் விமானத்தில் பரஸ்பரமாக சந்தித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை கனிமொழி எம்.பி. தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு, 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்று அந்த படத்திற்கு கீழே பதிவிட்டுள்ளார்.






