கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசுகிறார் விஜய்..!

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 5 பஸ்களில் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து பேசுகிறார் விஜய்..!
Published on

சென்னை,

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற உள்ளது. இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து நேற்று அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் வக்கீல்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து 5 சொகுசு பஸ்களில் 36 பேரின் குடும்பத்தினருடன் புறப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தடைந்தனர். அவர்களை விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com