கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருதாளம் ரயில்வே டிராக் அருகில் கடந்த 7.7.2016 அன்று காலை 7 மணியளவில் தர்மபுரி மாவட்டம், எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் விஜி (வயது 21) கொலை செய்யப்பட்டது தொடர்பாக கெலமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இறந்த விஜிக்கும் தேன்கனிக்கோட்டை, லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மையா மனைவி பச்சையம்மாள் (30) என்பவருக்கும் இடையே இருந்த தகாத உறவு காரணமாக, பச்சியப்பா மகன் லக்ஷ்மையா(எ) ராஜா (38), ராஜப்பா மகன் மாதப்பா (55), மாதப்பா மகன்களான முருகேஷ் (24), ஜெகதீஷ் (21), அப்பாய்யா மகன் மல்லேஷ் (21), ராஜகோபால் மகன் பொன்னுசாமி (21), வெங்கடேசன் மகன் முத்து(எ) முத்துசாமி (23), லக்ஷ்மையா மனைவி பச்சையம்மாள் (30) ஆகியோர் சேர்ந்து விஜியை கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கெலமங்கலம் போலீஸ் சண்முகசுந்தரம், வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணை ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (25.04.2025) இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லக்ஷ்மையா(எ) ராஜா, முருகேஷ், மல்லேஷ், பொன்னுசாமி, முத்து(எ) முத்துசாமி, பச்சையம்மாள் ஆகிய 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் முதல் 5 குற்றவாளிகள் சேலம் மத்திய சிறைச்சாலையிலும், 6வது குற்றவாளியான பச்சையம்மாள் கோவை மகளிர் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.






