ரூ.42.60 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் ரூ. 42.60 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (26.10.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, திரு,வி,க,நகர் மண்டலம், வார்டு-70, கபிலர் தெருவில் ரூ. 4.63 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 17 வகுப்பறைகள் கொண்ட சென்னை நடுநிலைப்பள்ளி கட்டடம் மற்றும் வார்டு-64, சீனிவாசா நகரில் ரூ. 3.25 கோடி மதிப்பீட்டில் 12 வகுப்பறைகள் கொண்ட தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதியதாக கட்டப்பட்டு வரும் சென்னை தொடக்கப்பள்ளியின் புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், வார்டு-69, ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.14.95 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடம் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, வார்டு-69, ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.19.77 கோடி மதிப்பீட்டில் நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் கூடம், திருமண நிகழ்வு கூடம், ஓய்வுவறை, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நல கூடத்தின் பணிகளைப் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அமைச்சர் வார்டு-64, கணேஷ் நகரில் மீட்கப்பட்ட 20 சென்ட் நிலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, மேயர் ஆர்.பிரியா, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் எ. நாகராஜன், ஸ்ரீதனி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






