இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரம் நேற்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. சுற்றுப்பயணத்தின் 38-வது நாளான நேற்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் பச்சரிசி ஒரு கிலோ 40 ரூபாயாக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் இப்போது ஒரு கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொன்னி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.50-க்கு விற்றது. இப்போது தி.மு.க. ஆட்சியில் ரூ.72 ஆக உயர்ந்து விட்டது. இட்லி அரிசி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்றது. இப்போது ரூ.42 ஆகி விட்டது. கடலை எண்ணெய் ரூ.130-ல் இருந்து ரூ.190-க்கும், நல்லெண்ணை ரூ.300-ல் இருந்து ரூ.400-க்கும் விலை உயர்ந்து விட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசியை உயர விடாமல் அதற்கென தனியாக நிதி ஒதுக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் தன்னை சூப்பர் முதல்-அமைச்சர் என கூறிக்கொள்கிறார். கடன் வாங்கியதில் தான் அவர் சூப்பர் முதல்வராக உள்ளார். இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். கடந்த 4 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். இன்னும் 8 மாதங்களில் மேலும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்குவார். இதன்மூலம் தி.மு.க. ஆட்சி முடிவில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக உயரும். இந்த கடன் அனைத்தும் மக்கள் தலையில் தான் விடியும். எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






