காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி கொடூரக்கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். மீனவர். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகள் ஷாலினி (வயது 17). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மீனவர் முனியராஜ் (21). இவர் ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி தினமும் பள்ளிக்கு நடந்து செல்லும்போது, பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

நேற்று முன்தினம் காலையில் ஷாலினி வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த முனியராஜ், தன்னை காதலிக்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டதுடன், 2 கத்திகளால் ஷாலினியின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ராமேசுவரம் துறைமுக போலீஸ் நிலைய போலீசார், முனியராஜை கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். முனியராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்தது குறித்து போலீசார் கூறுகையில், சில மாதங்களாக நான், மாணவி ஷாலினி பள்ளி செல்லும் போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதும் பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினேன். வீட்டை விட்டு வெளியே வந்துவிடு, நாம் எங்காவது சென்றுவிடலாம் எனவும் கூறினேன்.

நான் ஒருதலையாக அவளை தீவிரமாக காதலித்தேன். எனது நெஞ்சில் ஷாலினி என பச்சையும் குத்தி உள்ளேன். ஆனால், நான் படிக்க வேண்டும். உயர்கல்விக்கு செல்ல வேண்டும். எனவே என்னை பின்தொடர வேண்டாம் என ஷாலினி கூறினாள். இனியும் தன்னை பின்தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்தால் பெற்றோர் மூலம் போலீசில் புகார் அளிப்பேன் எனவும் கூறினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, முனியராஜை ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வருகிற 3-ந் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பலத்த போலீஸ் காவலுடன் அழைத்துச்செல்லப்பட்ட அவர், ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com