சென்னையில் 2 ஆயிரம் சாலைகளில் பள்ளங்கள்; சீரமைப்பு பணி தீவிரம் - மேயர் பிரியா பேட்டி

40 செ.மீ. மழை பெய்யும் போது தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் பிரியா கூறினார்.
சென்னை,
சென்னை ராயபுரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். இதன் பின்னர், நிருபர்களிடம் மேயர் பிரியா அளித்த பேட்டியின்போது, சென்னையில் மழை அதிகமாக பெய்யும் போது சாலைகளில் பள்ளம் ஏற்படும். ஒவ்வொரு வார்டு வாரியாக இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளங்களை உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தியுள்ளோம்.
அதன்படி, 2 ஆயிரம் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
நடப்பாண்டில் 206 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மழைநீரை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் ஒரு வாரம் கூட தண்ணீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கும் நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 24 மணி நேரத்தில் தண்ணீர் முழுமையாக வடிந்து விடுவதை பார்க்க முடிகிறது. 15 செ.மீ. மழை பெய்தால் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறிவிடும் வகையில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
40 செ.மீ. மழை பெய்யும் போது தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






