டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு?... பரபரப்பின் உச்சியில் அரசியல் களம்

அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார்.
சென்னை,
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி 9-ந்தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார்.
அதில் தொடங்கிய கருத்து மோதல் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. இதற்கிடையே கடந்த 5-ம் தேதி செங்கோட்டையன் மனம் திறந்து பேசுகையில், “அதிமுகவிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அதற்குள் ஒருங்கிணைக்கும் பணியை தொடங்க வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்துசென்ற தலைவர்களை ஒருங்கிணைத்தால்தான் நாம் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும். அவ்வாறு செய்யவில்லையென்றால் என்னைப்போன்ற நிலையில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அந்த பணியை மேற்கொள்வோம்” என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மறுநாளே செங்கோட்டையன், அதிமுக பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து செங்கோட்டையன் கட்சியின் ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றும் பதவி பறிப்பை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். அதை தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி செங்கோட்டையன், டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து கடந்த 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் சந்திப்பது, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, யாரையும் சந்திக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக, தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தினகரனின் அமமுக, மாவட்டச் செயலாளர்கள் சிலரை செங்கோட்டையனை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதியம் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்த நிலையில், தினகரனை செங்கோட்டையன் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தினகரனை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் சந்திப்பு நடைபெறும் என்று ஒ.பன்னீர்செல்வம் கூறினார். இதனால் தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.






