மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
x

ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பாஸ்கர் (53 வயது) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் தொட்டுப்பழகி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அவருடைய குடும்பத்தினரிடம் ஆசிரியரின் தவறான அணுகுமுறை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயாவிடம் சென்று பாலியல் தொல்லை குறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியை விஜயா, நடந்த விவகாரம் குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவியின் தாயார் பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் ஆசிரியர் பாஸ்கர், 5-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளிடம் தவறான முறையில் தொட்டு பழகி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ‘போக்சோ’ வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயாவையும் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story