மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற பேச்சுவார்த்தை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார். சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
மத்திய மந்திரி பியூஷ்கோயலுடனான சந்திப்புக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
”நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.






