‘போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநிலத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்தியாவில் போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மாநிலத்தின் மீது அவதூறு பரப்பும் முயற்சிகள், உண்மையான தரவுகள் மூலம் வீழ்த்தப்பட்டுள்ளன. தீவிர சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளே இதற்கு ஆதாரமாக உள்ளன.
போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கடந்த 2022-ம் ஆண்டு 80 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதம் 88 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 4,889 வழக்குகளில் 3,493 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கையாகும்.
இது தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள விரிவான கட்டுரையில் தரவுகளும், ஆதாரங்களும் நிரம்பியுள்ளன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






