இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளது தமிழ்நாட்டில்தான் - கனிமொழி எம்.பி.
அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாபு இல்லை என கனிமொழி பேசி உள்ளார்.
திருப்பூர்,
திருப்பூரில் நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் கனிமொழி எம்.பி. பங்கேற்று, அனைவரையும் வரவேற்று பேசியதாவது:-
அன்கன்ட்ரோலபுள் முதல்-அமைச்சர் என அனைவராலும் அழைக்கப்படும் முதல்-அமைச்சருக்கு வணக்கம். எல்லோரும் பாராட்டக்கூடிய, எதிரிகள் அச்சப்படக்கூடிய முதல்-அமைச்சர். மாநாட்டு ஏற்பாடுகளை செந்தில் பாலாஜி மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியை, பெண்களை பெருமைப்படுத்தும் ஆட்சியை நடத்தும் முதல்-அமைச்சருக்கு நன்றி.
உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்காக அரசமைப்பு புத்தகம் பரிசளித்தோம். தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்-அமைச்சருக்கு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.30 கோடி சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப்படுகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை இந்த சகோதரிகள் சொல்வார்கள்.
உயர்கல்விக்கு செல்லக்கூடிய பெண்கள் சராசரியில் நாம் வளர்ந்த நாடுகளுக்கு நிகராக இருக்கிறோம். பாதுகாப்பான மாநிலம் என்பதால் அதிகமாக வேலைக்கு போகும் பெண்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளது தமிழ்நாட்டில்தான்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகம். பாஜக ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாபு இல்லை. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றம் என்ன என்பது நமக்குக் தெரியும். பாதிக்கப்பட்ட பெண்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனை அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள்?.
கிராமபுற மக்களின் 100 நாள் வேலை திட்டத்திற்கு உலை வைக்கும் ஆட்சி பாஜக ஆட்சி தான். மதக் கலவரத்தை, வெறுப்பை உருவாக்கி அரசியல் செய்யும் பாஜகவுக்கு சம்மட்டி அடி தருவது முதல்-அமைச்சரே.
இவ்வாறு அவர் கூறினார்.








