100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
செங்கல்பட்டு,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போன் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
திராவிட முன்னேற்ற கழகம் ஒரு தீய சக்தி என்று கூறியவர் எம்.ஜி.ஆர். தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்று தான் அதிமுகவை தொடங்கினார். அதனை கட்டி காத்தவர் அம்மா. தீய சக்தி திமுகவை தமிழகத்தில் வேரோடு அகற்றுவதே அதிமுகவின் லட்சியம். கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு.
மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விழாவில் எனக்கு சாவல் விடும் விதமாக சேலஞ்ச் செய்தார். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உறுவாக்கியதே அதிமுக ஆட்சியில் தான். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதில் 5 சதவீதம் தான் திமுக நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் அதிமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை 95 சதவீதம் நிறைவேற்றி உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியில், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என சொன்னார்கள் ஆனால் உயர்த்தினார்களா?.. அத்தனையும் பொய்.
தற்போது அதிமுக வைத்த கோரிக்கையால் 100 நாள் வேலை திட்டம் 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பலம் உயர்த்தி தரப்படும் என திமுக வாக்குறுதி அறிக்கையில் சொல்லப்பட்டது. ஆனால் சம்பலத்தை உயர்த்தினார்களா?.
100 நாள் வேலை திட்டத்தை கூட முழுமையாக கொடுக்காத அரசு திமுக அரசு. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 125 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும். ஊதியம் உயர்த்தி தரப்படும். தடை இல்லாமல் பணி வழங்கப்படும். இது அதிமுகவின் லட்சியம்.
வேண்டும் என்றே திட்டமிட்டு ஊழியர்களுக்கு தவறான அவதூறு பிரசாரத்தை பரப்பி வருகிறார் மு.க.ஸ்டாலின். 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பொய் சொல்கிறார் இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
100 சதவீதம் உறுதியாக சொல்கிறோம். தற்போது 100 நாள் வேலை திட்டம் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் மேலும் கோரிக்கை வைத்து 125 நாட்களை 150 நாட்களாக உயர்த்துவதற்கான நடவடிக்கையை அதிமுக கட்சி எடுக்கும். அதிமுக ஆட்சி அமைத்த உடன் இது நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






