கோவை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதல்-அமைச்சர் ; எல்.முருகன்

போதை பழக்கத்தால் புதிய குற்றவாளிகள் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை,
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். மேலும் பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்க முயன்ற காவலர் சந்திரசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், கோவை சம்பவம் தொடர்பாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்.குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதல்-அமைச்சர். குற்றத்தை தடுக்கத் தான் காவல்துறையும் தமிழக அரசும் இருக்கிறது.அலங்கோல திமுக ஆட்சி, பதவிக்காலம் முடியும் முன்பாக விழித்துக் கொள்ளுமா?
கோவை சர்வதேச விமான நிலையப் பகுதியில், கல்லூரி மாணவி ஒருவரை மூன்று சமூகவிரோதிகள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரம் பேர் உபயோகித்து வரக்கூடிய இந்த கோவை சர்வதேச விமானப் நிலையப் பகுதியைச் சுற்றிலும், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. கோவையின் மிகவும் முக்கியமான இப்பகுதியில், இளம்பெண் ஒருவர் மீது நடைபெற்றுள்ள இந்தப் பாலியல் வன்முறையானது, தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தக் கொடுமைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
மாணவிக்கு நடந்த கொடுமை என்பது, திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையை தோலுரித்துக் காட்டுகிறது. குற்றவாளியை கைது செய்ததையே சாதனையாகக் கூறி, தமது ஆட்சி கடமை தவறியதிலிருந்து முதலமைச்சர் தப்பித்துக் கொள்ள முடியாது. கோவையில் மாணவிக்கு நடந்த கொடுமைக்கு, தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு சிறிதும் இல்லை. தமது அரசின் தோல்வியை மூடி மறைப்பதில் மட்டுமே அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதும் காவல்துறையின் அடிப்படைக் கடமை. ஆனால், இதனையே ஒரு சாதனையாக முதலமைச்சர் கூறுவது பெரும் வருத்தத்துக்குரியது. தனது ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக அவர் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. மக்களைக் காப்பதும் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதும் தான் காவல்துறையின் கடமை. அதனைச் செய்ய காவல்துறையும் தமிழக அரசும் தவறிவிட்டது. குற்றம் நடக்காமல் தடுக்க திராணியற்ற தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், கைது செய்ததை சாதனையாக பேசுவது வெட்கக்கேடான செயல்.
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இனி இத்தகைய கொடுமைகள் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியும், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது முதலமைச்சர் என்ன கூறினார்? இப்போதும் அதே பழைய பல்லவியையே பாடுகிறார்.
ஆனால் நடப்பது என்ன? தமிழகத்தில் பெண்கள் மீதான கொடூர குற்றங்கள் சிறிதளவும் குறைந்தபாடில்லை. தற்போது கோவையில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் மதுபானமும், போதைப் பொருட்களும் புதிய புதிய குற்றவாளிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய துளியும் அக்கறை இல்லாத திமுக அரசால், சட்டம்- ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டிய காவல்துறையும் செயலிழந்து நிற்கிறது. இந்த அலங்கோல ஆட்சி முடிவு பெற ஒரு சில மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள்ளாவது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழித்துக் கொண்டால் சரி என அதில் கூறப்பட்டுள்ளது.






