முதல்-அமைச்சருக்கு வேலைப்பளு இருப்பதால் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்ய நேரமில்லை: கனிமொழி எம்.பி.


முதல்-அமைச்சருக்கு வேலைப்பளு இருப்பதால் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்ய நேரமில்லை: கனிமொழி எம்.பி.
x

உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி என்று கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்

சிவகங்கை

சிவகங்கையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், திமுகதுணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று சென்றார். அவர் ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மாதிரிப்பள்ளி மாணவ-மாணவியரை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, முதல்-அமைச்சருக்கு வேலைப்பளு இருப்பதால் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்ய நேரமில்லை என்றார்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மாதிரிப் பள்ளியில், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்க்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது, மாணவ–மாணவிகள், இதுவரை ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அருங்காட்சியகங்களை பார்வையிடவில்லை; அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் அந்தக் கோரிக்கையை ஏற்று, (24/08/2025) அன்று மாவட்ட மாதிரி பள்ளிக்குச் சென்ற கனிமொழி எம்.பி, 4 பேருந்துகளில் 200 மாணவ - மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆதிச்சநல்லூர் சென்றார். அப்போது அவரும் மாணவியருடன் பேருந்தில் அமர்ந்து பேசியபடி பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் ‘பி’ சைட்டில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தையும், ‘சி’ சைட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களையும், மாணவ–மாணவிகளுடன் இணைந்து கனிமொழி பார்வையிட்டார்.

அதேபோல், இன்று (27/12/2025) வல்லநாடு மாதிரிப் பள்ளியிலிருந்து 4 பேருந்துகளில் 200 மாணவர்களை, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஏற்பாட்டில் கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது, கீழடி அருங்காட்சியத்தைப் பார்க்க வேண்டும் என்று மாணவர்கள் நீண்ட நாட்களாகவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்கான ஆர்வத்தையும் காட்டி இருந்தார்கள். அதனால், அந்த மாணவர்கள் அனைவரையும் அழைத்து, இன்று இந்த அருங்காட்சியத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.

நம்முடைய தமிழ் மக்களின் வரலாறு என்ன? நம்முடைய நாகரிகம் என்ன? அதன் பெருமைகள் என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் கொண்ட ஒரு மொழி, ஒரு பாரம்பரியத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம் என்பதை, நம்முடைய பிள்ளைகள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கித் தந்த முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசித்து வரும், வேலை செய்து வரும் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் 100 நாள் வேலைவாய்ப்பு என்று நாம் சொல்லக்கூடிய கிராமப்புற வேலை உறுதி திட்டம். இந்த திட்டம், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு உரிய முறையில் உறுதி செய்யப்படவில்லை. அதிகபட்சமாக 40 நாட்கள் வேலை மட்டுமே வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இன்று அந்த திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெயர் மாற்றம் மட்டுமல்லாமல், ஒரு மாநில அரசுக்கு எத்தனை பேருக்கு வேலை வழங்கலாம் என்ற உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஊதியத்தை மத்திய அரசு வழங்கிய நிலைமையிலிருந்து, தற்போது 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு நிர்ணயிக்க கூடிய நபர்களுக்கு எண்ணிக்கையில் தான் வந்து வேலை கொடுக்க முடியும். அதை தாண்டி வேலை கொடுக்கும் பொழுது, அந்த பளுவையும் மாநில அரசாங்கமே ஏற்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும், இந்த திட்டத்தை மெதுவாக முடக்குவதற்கும், தடுத்து நிறுத்துவதற்குமான முயற்சிகளாகவே பார்க்க முடிகிறது. இதன் காரணமாக, கிராமப்புறங்களில் வாழும் மக்களின் பொருளாதார தாரத்தை மிகப்பெரிய அளவிலே பாதிக்கக்கூடிய ஒரு சூழலை நாடு முழுவதுமே இது உருவாகும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேடை ஏறி நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். எடப்பாடி பழனிசாமி உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர்.

முதல்-அமைச்சருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில், எடப்பாடி பழனிசாமியோடு எல்லாம் விவாதிக்க முடியாது, கட்சியில எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் வேண்டுமானால் அவரோட விவாதிக்க தயாராக இருப்பார்கள், அவங்களோட விவாதிக்கட்டும். அதெல்லாம் தாண்டி, சில கேள்விகள் இருந்தால் முதல்-அமைச்சர் நிச்சயமாக பதில் அளிப்பார்’ என்றார்.

1 More update

Next Story