இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
Live Updates
- 21 Aug 2025 5:32 PM IST
35 நிமிடங்கள் உரையாற்றிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் தற்போது தனது உரையை நிறைவு செய்துள்ளார். அவர் 35 நிமிடங்கள் மாநாட்டு மேடையில் உரையாற்றியுள்ளார். மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய், 5.25 மணி வரை பேசிய நிலையில் தற்போது நிறைவு செய்துள்ளார்.
- 21 Aug 2025 5:24 PM IST
உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம் - விஜய்
மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது:-
பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.
234 தொகுதிகளிலும் உங்கள் வீடுகளில் உள்ளவர்கள்தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம். தமிழ் மக்கள் யாவரும் என் ரத்த உறவுகள். அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் வந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான். தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க உங்கள் விஜய் வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன். இவ்வாறு அவர் கூறினார்.
- 21 Aug 2025 5:02 PM IST
தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது - விஜய் அதிரடி பேச்சு
தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.
மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள்; இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம்.
யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? இவ்வாறு அவர் கூறினார்.
- 21 Aug 2025 4:48 PM IST
அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார் - ஆதவ் அர்ஜுனா
மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-
எல்லாருக்கும் எல்லாமும் என்ற அரசியலை 1967-ல் அண்ணா கொண்டு வந்தார். அண்ணா கொண்டு வந்த சமத்துவ அரசியலே திராவிடம். அண்ணாவின் குறிக்கோளில் இருந்து மு.க.ஸ்டாலின் முற்றிலும் விலகிவிட்டார்.
எம்ஜிஆர் உருவாக்கிய கொள்கை, அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து தடம் மாறி பாஜகவுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழகத்தில் பாஜக பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை அடைவதற்கு அதிமுகவின் இன்றைய தலைமை எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது.
அண்ணாவின் கொள்கைகளையும், எம்ஜிஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி அதை அரசியல் வெற்றியாக மாற்றி 2026-ல் மிகப்பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, விஜய் முதல்வராகி அந்த கொள்கைகளை நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
- 21 Aug 2025 4:37 PM IST
திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன - தவெக நிர்வாகி அருண்ராஜ்
மாநாட்டில் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறியதாவது:-
திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன. பேரறிஞர் அண்ணா தன்னுடைய குடும்பத்துக்கு எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவருக்கு கடன் இருந்தது. இன்றைய திமுகவினர் நிலை என்ன? இன்னும் இரண்டு அமலாக்கத்துறை சோதனை நடந்தால், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி தேவை என்று சொன்னாலும் சொல்வார்கள். பிளவுவாத சக்திகளை எதிர்க்க வேண்டும் என்றால் சமரசமில்லாத கொள்கை வேண்டும். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஒரே நம்பிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.
- 21 Aug 2025 4:30 PM IST
வெயிலில் காத்திருந்தவர்கள் விஜய்யை கண்டதும் புறப்பாடு
தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கட்சி நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் ரேம்ப் வாக் முடிந்ததும் கணிசமான கூட்டம் கலைந்து வருகிறது. காலையிலிருந்து வெயிலில் வெகுநேரம் காத்திருந்தவர்கள் விஜய்யை பார்த்ததும் புறப்பட்டு சென்று வருகின்றனர்.
- 21 Aug 2025 4:20 PM IST
மதுரை தவெக மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தென்தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி காட்டி உள்ளோம். தமிழ்நாடே அதிர்ந்துவிட்டது; மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம். தவெக தொண்டர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்; புஸ்ஸி ஆனந்த்
- 21 Aug 2025 4:06 PM IST
கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை
மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
- 21 Aug 2025 4:03 PM IST
தடுப்புகளை தாண்டி ராம்ப் வாக்கில் ஏறிய தொண்டர்கள்
தவெக இரண்டாவது மாநில மாநாடு தொடங்கிய நிலையில், மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களுக்கு கை காட்டியபடி ராம்ப் வாக்கில் நடந்து வந்தார். அப்போது தொண்டர்கள் சிலர் ராம்ப் வாக்கில் தடுப்புகளை தாண்டி ஏறி ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். தொண்டர்கள் வீசிய துண்டுகளை வாங்கிய விஜய் தனது கழுத்தில் போட்டுக்கொண்டார். விஜயுடன் சில தொண்டர்கள் செல்ஃபியும் எடுத்தனர்.
- 21 Aug 2025 3:55 PM IST
மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்
தவெக 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு சிறப்பு மாநாட்டு பாடல் வெளியிடப்பட்டது. 'பெரியாரின் பேரன்' என்ற பின்னணி வரிகள் முழங்க பெரும் ஆரவாரத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப் வாக்’ நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது தொண்டர்கள் கொடுத்த கட்சித் துண்டுகளை பெற்று தோளில் அணிந்து கொண்டார்.


















