இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
Live Updates
- 21 Aug 2025 3:33 PM IST
தவெக மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு
தவெக 2-வது மாநில மாநாடு தொடங்கியுள்ள நிலையில், மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மாநாடு தொடங்கி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக விஜய் மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.
மேடைக்கு வந்ததும், விஜய் தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செல்கிறார். அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படும். அதன் பின்னர் வரவேற்புரை வாசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 21 Aug 2025 3:11 PM IST
தவெக 2-வது மாநில மாநாடு தொடங்கியது - தொண்டர்கள் ஆரவாரம்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டின் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெறுகிறது.
முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்க இருந்த நிலையில், கூட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது முன்கூட்டியே மாநாடு தொடங்கியுள்ளது. விஜய்யின் பெற்றோர் மாநாட்டு மேடைக்கு வருகை தந்துள்ளனர்.
- 21 Aug 2025 3:03 PM IST
தவெக மாநாடு: 3 கிராமங்களில் பள்ளிகள் முற்பகலோடு நிறைவு
தவெக மாநாட்டையொட்டி 3 கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள அரசு பள்ளிகள் முற்பகலோடு நிறைவடைந்துள்ளன.
மாநாடு முடிந்தபிறகு மதுரை - தூத்துக்குடி சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும்; இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அரசு பள்ளிகள் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளன.
- 21 Aug 2025 2:40 PM IST
3 மணியளவில் தவெக மாநாடு தொடங்கும் - பொதுச்செயலாளர் ஆனந்த்
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு 3 மணியளவில் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் மேடையில் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி இன்னும் 30 நிமிடங்களில் தவெக மாநாடு தொடங்க உள்ளது.
முன்னதாக மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாடு முன்கூட்டியே தொடங்க உள்ளது.
- 21 Aug 2025 1:46 PM IST
தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள 10 தீர்மானங்கள்...?
தவெக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்மானம், லாக்அப் மரணம், நெசவாளர்கள் விவகாரம், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு, இலங்கை மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கவின் ஆணவக் கொலை பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அது குறித்து மாநாட்டில் விஜய் ஏதாவது பேசுவாரா? அல்லது தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
- 21 Aug 2025 1:24 PM IST
குழந்தைகளுடன் வந்தோர் வெளியேற்றம்
தவெக மாநாட்டிற்கு குழந்தைகளுடன் வந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தவெக மாநாட்டிற்கு குழந்தைகளுடன் வந்தவர்களை மருத்துவக்குழுவினர் வெளியேற்றி வருகின்றனர். மாநாட்டு திடலின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் எலியார்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் 70 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளது.
- 21 Aug 2025 1:12 PM IST
தவெக மாநாடு: வெயில் பாதிப்பால் தொண்டர்கள் 3 பேர் மயக்கம்
தவெக மாநாட்டு பந்தலில் கொளுத்தும் வெயில் காரணமாக 3 தொண்டர்கள் மயக்கமடைந்தனர்.
வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த பெண் உள்பட 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
- 21 Aug 2025 1:02 PM IST
தவெக மாநாடு: தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்
தவெக மாநாட்டிற்காக 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் உயிர்காக்கும் கருவிகளுடன் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- 21 Aug 2025 12:56 PM IST
தவெக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - போக்குவரத்து நெரிசல்
மதுரை வலையங்குளம் வழியாக தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் வலையங்குளம் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- 21 Aug 2025 12:25 PM IST
மயங்கி விழுந்த தவெக தொண்டர்.. பதறி ஓடிய பவுன்சர்ஸ் - மாநாட்டில் பரபரப்பு
கடுமையான வெயில் வாட்டி வதைக்கும்நிலையிலும் மாநாட்டு திடலின் உள்ளே ஏராளமான தவெக தொண்டர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாநாட்டின் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அடியிலும், ஒலிபெருக்கி, தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளுக்கு அடியிலும் தொண்டர்கள் ஒதுங்கி வருகின்றனர். மேலும் கிரீன் பெட்ஷூட்களை பேரிகார்டுகளில் கட்டி அதன் நிழலில் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடும் வெயில் காரணமாக தவெக தொண்டர் ஒருவர் மயங்கி விழந்ததார். அப்போது உடனடியாக செயல்பட்ட பவுன்சர்கள், அவரை பாதுகாப்பாக மருத்துவ உதவிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


















