இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நிறைவடைய உள்ளது - மத்திய அரசு தகவல்

இந்திய அரசு தரப்பில் அதிகாரிகள் குழுவினர் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. இதற்கிடையில், வர்த்தக விவகாரங்கள் குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசு சார்பில் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், கடந்த மாதம் வாஷிங்டன் சென்றனர். அங்கு 3 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தை அக்டோபர் 17-ந்தேதி முடிவடைந்தது. தொடர்ந்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றும், இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரி விதித்த விவகாரத்திற்கு தீர்வு எட்டப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






