இத்தனை லட்சம் பேருக்கு கிடைக்கப்போகிறதா..? 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்


இத்தனை லட்சம் பேருக்கு கிடைக்கப்போகிறதா..? 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Dec 2025 1:20 PM IST (Updated: 11 Dec 2025 4:56 PM IST)
t-max-icont-min-icon

மொத்தம் 28 லட்சம் பெண்கள், 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த நிலையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்ட போதும், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நேரத்தில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார்.

அதன்படி, 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக 2023-2024-ம் ஆண்டில் ரூ.7926.35 கோடியும், 2024-2025-ம் ஆண்டில் ரூ.13,790.61 கோடியும், 2025-ம் ஆண்டு நவம்பர் வரை ரூ.9,121.49 கோடியும் என மொத்தம் ரூ.30 ஆயிரத்து 838 கோடியே 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் பல பெண்கள், தங்களையும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதன்படி, விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கின. மொத்தம் 28 லட்சம் பெண்கள், மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி சுமார் 17 லட்சம் பேர் 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவகியும், பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022-ம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

1 More update

Next Story