லாரியை கடத்திய நபர்...10கி.மீ தொங்கியபடியே சென்ற காவலர் - வீடியோ வைரல்

10 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரியில் காவலர் தொங்கிச் சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார்
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லாரியின் உள்ளே ஏறி லாரியை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி கடத்தி செல்ல முயன்றுள்ளார்.
சுதாரித்துக் கொண்ட டிரைவர் லாரியின் பின்னால் ஓடி சென்று பிடிக்க முயன்றபோது பிடிக்க முடியாததால் அருகில் இருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுடன் சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை துரத்திச் சென்றனர்
அப்போது மகேந்திரா சிட்டி சிக்னலில் லாரி நின்றபோது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் முருகன் லாரியில் ஏற முயன்றார். காவலர் உள்ளே ஏற முயன்றதை கவனித்த நபர் லாரியை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்றார்.
அப்போது காவலர் உயிரை பணயம் வைத்து லாரியில் தொங்கிக்கொண்டு சென்ற நிலையில் மறைமலைநகர் சிக்னலுக்கு அருகே போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து லாரியை கடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






