பரபரப்பாகும் அரசியல் களம்.. த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்க தயாராகும் விஜய்


பரபரப்பாகும் அரசியல் களம்.. த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்க தயாராகும் விஜய்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Dec 2025 8:47 AM IST (Updated: 20 Dec 2025 8:48 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

சட்டசபை தேர்தலை சந்திக்க முழு வீச்சில் த.வெ.க. தயாராகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் 234 தொகுதிக்கும் தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். இதில், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பெண்கள், பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஈரோடு மக்கள் சந்திப்பு பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியாக காணப்படும் விஜய், தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான பணிகளை த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா பாணியில் விஜய்க்கும் அவர் பயண திட்டத்தை வகுத்து வருகிறார். இதற்கிடையே, த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கட்சியின் தலைவர் விஜய் முடுக்கி விட்டுள்ளார்.

த.வெ.க. கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இடம் பெற உள்ளனர்.

50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனை கூட்டணி அமைப்பதற்கான குழு தலைவராக அமர்த்துவதன் மூலம் மற்ற கட்சி தலைவர்களை எளிதாக அணுக முடியும் என்று த.வெ.க. நம்புகிறது. எனவே விரைவில் இதற்கான அறிவிப்பை த.வெ.க. வெளியிட இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் எந்த அணியிலும் இல்லாத தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடம் செங்கோட்டையன் தலைமையிலான குழு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஜனவரிக்குள் கூட்டணி தொடர்பான நல்ல முடிவு எட்ட த.வெ.க. தலைமை வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களை உடனடியாக அறிவிக்கவும் த.வெ.க. திட்டமிட்டுள்ளது. வரும் 24-ந் தேதி கட்சிக்கு புதிய சின்னம் (விசில் அல்லது மோதிரம்) கிடைத்து விடும் என்பதால் த.வெ.க. தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story