பீகாரின் நிலைமை தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கலைஞர் மீதும், திமுக மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ. என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர். தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.
பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பீகாரின் நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது. அதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது.
நாளை முதல் ஒரு வாரம் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன். அங்கு நடைபெறவுள்ள ஒரு முக்கியமான நிகழ்வை இப்போது அறிவிக்க விரும்புகிறேன். எனது வெளிநாட்டு பயண திட்டம் குறித்து நாளை செய்தியாளர்களிடம் விளக்குகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை நான் திறந்துவைக்க உள்ளேன். அதை எண்ணிப் பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி, எழுதியிருந்தாலும் அவருடைய சிந்தனைகள் உலகத்தில் அனைவருக்கும் பொதுவானது. அவர் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வின்மை, அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. அப்படிப்பட்ட அறிவு மேதை உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.






