ஊட்டியில் பழங்குடியின பெண்ணை அடித்துக்கொன்ற புலி கூண்டில் சிக்கியது


தினத்தந்தி 11 Dec 2025 9:29 AM IST (Updated: 11 Dec 2025 11:08 AM IST)
t-max-icont-min-icon

30-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுவைத்து ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கண்காணித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா பகுதியில் கடந்த மாதம் 24-ந் தேதி பழங்குடியினரான நாகியம்மாள் (வயது 65) என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அவரை புலி கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்படி, கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் புலி நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அப்போது வயதான ஆண் புலி நாகியம்மாளை கடித்து கொன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இரும்பு கூண்டுகள் வைத்து புலியை பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவனல்லா அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி பின்புறம் நேற்று பகலில் வயதான புலி நடமாட்டம் தென்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டு புலியை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், ஊட்டி அருகே மாவனல்லா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணை அடித்துக்கொன்ற டி37 புலி 16 நாட்களுக்கு பிறகு தற்போது சிக்கியுள்ளது. கூண்டில் சிக்கிய 12 வயது மதிக்கத்தக்க ஆண் புலியை, எங்கு விடுவிக்கலாம்? உயிரியல் பூங்காற்கு கொண்டு செல்லலாமா? என வனத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுவைத்து ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், புலி பிடிபட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story