அன்புமணி கூட்டும் பாமக பொதுக்குழுவிற்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அன்புமணி கூட்டும் பாமக பொதுக்குழுவிற்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2025 8:44 PM IST (Updated: 8 Aug 2025 9:15 PM IST)
t-max-icont-min-icon

பொதுக்குழுவிற்கு தடை கோரிய பாமக நிறுவனர் ராமதாஸின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, அவரை செயல் தலைவராக நியமித்ததோடு மட்டுமல்லாமல், இனிமேல் நான்தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்று ராமதாஸ் அறிவித்தார். ஆனால், பொதுக்குழு மூலம் கட்சியின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை தலைவர் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது என்று அன்புமணி கூறி வருகிறார். இரு தரப்பினரும் கட்சி நிர்வாகிகளை மாறி மாறி நீக்கியும், நியமித்தும் வருகின்றனர்.

அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி அன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் என அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். அன்புமணி அழைப்பு விடுத்திருக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாகப் பேச வேண்டியிருப்பதால், இருவரையும் தனது அறைக்கு நேரில் வருமாறு கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, அன்புமணி நீதிபதி முன்பாக நேரில் ஆஜரானார். ராமதாஸ் காணொலி வழியாக ஆஜரானார். இருவரிடம் நீதிபதி விசாரணை நடத்திய பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என உத்தரவிட்ட கோர்ட்டு, ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழு கூட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. ராமதாஸ் தரப்புக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தீர்ப்பின் நகலை பார்த்த பிறகு மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story