தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Nov 2025 11:34 AM IST (Updated: 10 Nov 2025 2:45 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஐ.ஆர் என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த திராணியற்ற அரசாக திமுக உள்ளது தெளிவாகிறது. அரசு, காவல் துறை மீது பயம் இல்லாமல் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா, என்ற சந்தேகம் எழுகிறது. போக்சோ வழக்கில் ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது.

டிஜிபி நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை திமுக அரசு பின்பற்றவில்லை. தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் அரசாங்கமும், காவல் துறையும் இருக்கிறதா என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நிரந்தர டிஜிபியை நியமிக்க வலியுறுத்தியும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டிஜிபி நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் அரசு இத்தனை பாரபட்சம் காட்டுகிறது?

வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆர்.

எஸ்.ஐ.ஆர் என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது. எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள கால அவகாசம் போதாது என கூறுகின்றனர். ஒரு மாதம் காலம் இருக்கிறது.300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும். போலி வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

திமுகவும், கூட்டணிக்கட்சிகளும் எஸ்.ஐ.ஆர்-யை எதிர்க்கும் நோக்கம் திருட்டு வாக்குகளுக்காகத்தான். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை மக்களுக்கு கூற ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். உயிரிழந்த ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளது. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக வழக்கு தொடர்ந்தது உண்மைதான். திமுக தவறான தகவல்களை தெரிவிப்பதாலேயே எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் வழக்கு போட்டுள்ளோம்.

என் மகனையோ, மருமகனையோ கட்சியில், ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதற்குமுன் கட்சியில் இருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது வைத்தார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக்கூறுகிறார் செங்கோட்டையன்.

அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை

அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என உள்துறை மந்திரியே அறிவித்துவிட்டார். முதல்-அமைச்சர் வேட்பாளரும் அதிமுகவை சேர்ந்தவர் தான் என்பதை அமித்ஷா உறுதி செய்துவிட்டார். நிதியே ஒதுக்காமல் பல்வேறு திட்டங்களுக்கு திமுக அரசு அடிக்கல் நாட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story