தூத்துக்குடி: கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது

கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்தது. எனவே நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் செந்தூர்நகர் விநாயகர் கழுகுமலை பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து சென்றனர். அப்போது கோவிலுக்குள் இருந்து வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நைசாக கோவிலுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் உடைத்துவிட்டு காணிக்கைகளை திருடிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசாரை கண்டதும் திடுக்கிட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் உஷாரான போலீசார் அந்த நபரை அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அந்த நபர் கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோமதிநாயகம் (வயது 45) என்பது தெரியவந்தது. கூலி வேலைக்கு சென்றுவந்த கோமதிநாயகம், சரிவர வருமானம் இல்லாததால் இரவு நேரத்தில் இந்த கோவிலுக்குள் புகுந்து பணம் திருட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கோமதி நாயகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவர் உண்டியலில் இருந்து திருடிய ரூ.850 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். இவருக்கும் கழுகுமலை பகுதிகளில் உள்ள சில கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






