இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 July 2025 2:46 PM IST
அரசுப் பேருந்துகளுக்கு விதித்த தடை நிறுத்திவைப்பு
4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஜூலை 31ஆம் தேதி வரை உத்தரவை நிறுத்திவைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 10 July 2025 1:19 PM IST
ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள நர்ஸ் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அவரது மனு மீது நாளை (ஜூலை 11ம் தேதி) விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
- 10 July 2025 1:08 PM IST
கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று முன்தினம் காலை கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரெயில், அந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் சங்கர் உள்பட 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்துக்கு காரணமாக கூறப்படும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அரக்கோணம்-செங்கல்பட்டு ரெயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதிகள் ஆய்வு நடத்தப்பட்டபோது, பணியின் போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி கேட் கீப்பர்களான கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் பணியின் போது உறங்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது. முன்னதாக கேட் கீப்பர்கள் பணியின்போது உறங்கினால் பணியில் இருந்து நீக்கும்படி தெற்கு ரெயில்வே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 10 July 2025 1:01 PM IST
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை; கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறியபோதும் நெருக்கடி ஏற்படவில்லை. யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது.
மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். மல்லை சத்யா பல காலம் எனக்கு துணையாக இருந்தார்; அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறேன். ஆனால் அண்மையில் அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.
மல்லை சத்யா மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக்குழு கூட்டத்தில் பதிவு செய்தேன். மல்லை சத்யா மீதான அதிருப்தியில் திமுக பின்னணியில் இருப்பதாக கூற முடியாது; அதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- 10 July 2025 11:01 AM IST
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த பாலம், மாவட்டத்தின் முஜ்பூர் மற்றும் கம்பீரா பகுதிகளை இணைக்கிறது. சவுராஷ்டிரா பகுதியையும் கூட இந்த பாலம் இணைக்கிறது.
இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. இந்நிலையில், குஜராத்தில் ஏற்பட்ட பால விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்து உள்ளது.
- 10 July 2025 10:35 AM IST
மதுரை மாநகராட்சியில் முறைகேடு செய்த தி.மு.க.வினரை காப்பாற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
















