இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Sept 2025 11:04 AM IST
மிளகாய்பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை - பரபரப்பு
திருச்சி - சிறுகனூர் அருகே தங்க வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் நகைகளை விற்பனை செய்துவிட்டு, 10 கிலோ தங்கத்துடன், 3 பேருடன் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி திரும்பி வந்தபோது காரை வழிமறித்து இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம் அருகே வந்தபோது காரை வழிமறித்து மிளகாய் பொடி தூவிய கும்பல், தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 Sept 2025 10:54 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி; இந்தியா வெற்றி பெற இந்து அமைப்பினர் சிறப்பு யாகம்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில், பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- 14 Sept 2025 10:51 AM IST
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை.. அவரைக் கொண்டாடுவது நம் கடமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!
இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 Sept 2025 10:47 AM IST
ஜியோ ஹாட்ஸ்டாரில்...குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய டாப் 5 அனிமேஷன் படங்கள்
தற்போது திரையரங்கிற்கு போய் படம் பார்த்த காலம் போய், வீட்டிலேயே ஓடிடி மூலம் குடும்பத்துடன் மொழிகளுக்கான தடைகளை தாண்டி பிடித்த படங்களை பார்த்து மகிழ்வதோடு, அனைத்துவிதமான ஜானர் படங்களையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், தற்போது பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய டாப் 5 அனிமேஷன் படங்களை காண்போம்.
- 14 Sept 2025 10:21 AM IST
இளையராஜாவுக்காக கமல்ஹாசன் பாடிய பாடல் - இணையத்தில் வைரல்
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜாவுக்காக மேடையிலேயே கமல்ஹாசன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 14 Sept 2025 10:20 AM IST
ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - தரைமட்டமான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகள்
தற்போது ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் ராணுவ தலைமையகம், கியாஸ் நிலையம் போன்றவையும் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் கடந்த 10-ந்தேதி ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பெண்கள் உள்பட 46 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
- 14 Sept 2025 10:18 AM IST
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியான சோகம்
ஹமாஸ் அமைப்பினரின் கடைசி கோட்டையாக உள்ள காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் அங்குள்ள ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
- 14 Sept 2025 10:15 AM IST
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்று அசத்தல்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, போலந்தின் ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஜாஸ்மின் 4-1 என்ற கணக்கில் ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
- 14 Sept 2025 10:13 AM IST
ஐ.பி.எல். தொடரில் மைக் ஹெசன் பயிற்சியளித்தபோது, ஆர்சிபி அணி எதையும் வெல்லவில்லை என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அப்படி இருக்கையில் அவரது பயிற்சியில் பாகிஸ்தான் எப்படி சிறப்பாக செயல்படப் போகிறது? என்றும் அவர் கூறியுள்ளார்.
- 14 Sept 2025 10:11 AM IST
ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக இந்திய அணி 8 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் சிறந்து விளங்கிய இந்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சபா கரீம் தேர்வு செய்துள்ளார்.
















