இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Oct 2025 9:57 AM IST
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைப்பு
அரசு சிறப்பு பஸ்களை நிறுத்துவதற்கு தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதாவது, தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநோி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஐ.டி.ஐ. வளாகத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, அதே வழித்தடம் வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப்பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் சந்திப்பில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பிச் செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம், மெயின் ஆர்ச் வழியாக தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
- 26 Oct 2025 9:45 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...!
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குற்றால மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து அருவில் நீர் வரத்து சீரானதையடுத்து குற்றால மெயின் அருவில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- 26 Oct 2025 9:40 AM IST
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
தாழ்வு மண்டலம் நாளை மோந்தா புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் ஆந்திராவின் காக்கி நாடா அருகே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90-100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
- 26 Oct 2025 9:36 AM IST
அடையாறு முகத்துவாரம் பகுதியில் முதல்-அமைச்சர் இன்று மீண்டும் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது. அதற்கேற்ப, சமீபத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அவருடன் மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயரதிகாரிகளும் சென்றிருந்தனர். பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் எந்த நிலையில் உள்ளன என அப்போது அவர் பார்வையிட்டார். அதுபற்றி அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து உள்ளார்.
- 26 Oct 2025 9:32 AM IST
4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











