இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
x
தினத்தந்தி 13 Oct 2025 9:29 AM IST (Updated: 13 Oct 2025 7:36 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 13 Oct 2025 12:11 PM IST

    சட்டசபை நாளை முதல் 4 நாட்கள் நடக்கிறது - சபாநாயகர்

    முதல் நாளில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மறைவுக்கும், மறைந்த நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.

    தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.

  • 13 Oct 2025 11:59 AM IST

    இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல் காரைக்கால் மீனவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 11-ம் தேதியில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் காவவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  • 13 Oct 2025 11:36 AM IST

    இருமல் மருந்து விவகாரம்: கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    22 குழந்தைகளை உயிர் பலி வாங்கிய சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகோட்டின் மேஸ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் (வயது 75), சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனாநகர் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 13 Oct 2025 11:34 AM IST

    புதுச்சேரியில் ரூ. 436 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்; நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்...!

    ரூ. 1,588 கோடியில் புதுச்சேரி, பூண்டியங்க்குப்பம் இடையே அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையையும் மத்திய மந்திரி கட்காரி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாத், முதல்-மந்திரி ரங்கசாமி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

  • 13 Oct 2025 11:22 AM IST

    கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  • 13 Oct 2025 11:20 AM IST

    காசா போர்நிறுத்தம்; 7 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல்

    உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பலன் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, அமைதிக்கான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் 20 பணய கைதிகள் வரை உயிருடன் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

  • 13 Oct 2025 10:32 AM IST

    நடிக்க போகிறேன்... மத்திய மந்திரி பதவி வேண்டாம்: சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை

    அவர் கண்ணூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உண்மையில் நான் நடிப்பை தொடரவே விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். என்னுடைய வருவாய் தற்போது முற்றிலும் நின்று விட்டது என்று கூறினார்.

    நான் ஒருபோதும் மந்திரியாக வேண்டும் என்று கேட்கவேயில்லை. தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு கூட, மந்திரியாக எனக்கு விருப்பமில்லை. என்னுடைய நடிப்பையே தொடர விரும்புகிறேன் என்று செய்தியாளர்களிடம் கூறினேன் என்றார்.

  • 13 Oct 2025 10:18 AM IST

    பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது...!

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

    மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை நாளை கூடுகிறது.

  • 13 Oct 2025 10:12 AM IST

    வேலூர் சட்டக்கல்லூரியில் புதிய நூலக கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்...!

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

  • 13 Oct 2025 10:10 AM IST

    ஓடிடியில் 200 மில்லியன் பார்வைகளை நெருங்கும் லிட்டில் ஹார்ட்ஸ்

    வெறும் 2.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் மவுலி தனுஜ் பிரசாந்த் மற்றும் ஷிவானி நகரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சாய் மார்த்தாண்ட் இயக்கியுள்ளார்.

    கடந்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் உலகளவில் ரூ. 35 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் தற்போது இடிவி வின் (ETV Win)ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.        

1 More update

Next Story