இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Aug 2025 12:47 PM IST
எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பு
எதிர்க்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
- 20 Aug 2025 12:31 PM IST
ஆப்கானிஸ்தான்: சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ் - 71 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணத்தில் பஸ் ஒன்று புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது. குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகர் அருகே பஸ் சென்றுகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 20 Aug 2025 12:29 PM IST
திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி: அன்புமணி
சமூகநீதியை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவரைப் போல நாடகங்களை அரங்கேற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்வதெல்லாம் சமூகநீதியை குழிதோண்டி புதைப்பது தான். வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 20 Aug 2025 12:25 PM IST
எதிர்பார்ப்புகளற்ற அன்பு இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் - இளைய தலைமுறையினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
50-வது திருமண நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்! அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!
எதிர்பார்ப்புகளற்ற அன்பும் விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- 20 Aug 2025 12:17 PM IST
வீட்டுப் பத்திரத்தை வழங்காத தனியார் வங்கிக்கு ரூ.2.29 லட்சம் அபராதம்
திண்டுக்கல்: வீட்டுக்கடனை முழுமையாக கட்டி முடித்தும் வீட்டின் பத்திரத்தை வழங்காத தனியார் வங்கிக்கு ரூ.2.29 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சேகரன் (71), 2004-ல் கடனாக பெற்ற ரூ.2.25 லட்சத்தை கட்டி முடித்தும் பல ஆண்டுகளாக முறையீடு செய்தும் பத்திரங்கள் வழங்கவில்லை. இதனால் 2024ல் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 20 Aug 2025 12:14 PM IST
தவெக மாநாட்டுக்கு கைகொடுத்த கேரளா...!
தவெக மாநாட்டிற்கு இருக்கைகள் தர முடியாது என ஒப்பந்ததாரர்கள் கூறியதால் கேரளாவிலிருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
தவெக மாநாட்டில் 1.5 லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டு 5 நபர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 4 பேர் கடைசி நேரத்தில் இருக்கைகள் தர முடியாது என்று கூறியநிலையில், கேரளாவிலிருந்து 50 ஆயிரம் நாற்காலிகள்கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் தவெக மாநாட்டுக்கு கேரளாவும் கைகொடுத்துள்ளது. இது தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 20 Aug 2025 12:14 PM IST
டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் குஜராத்தை சேர்ந்தவர்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை தாக்கிய நபர், குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சகாரியா என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குறித்தான விரிவான விபரங்களை குஜராத்காவல்துறையிடம் டெல்லி காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
- 20 Aug 2025 12:13 PM IST
ஓடிடியில் வெளியானது பவன் கல்யாணின் "ஹரி ஹர வீர மல்லு"
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் "ஹரி ஹர வீர மல்லு" படம் வெளியானது. இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
- 20 Aug 2025 12:11 PM IST
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய திட்டம்
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது. சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வருகைக்கான காரணம், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை குறித்து அனைத்து மாவட்டங்களில் ஆய்வு நடத்த திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
- 20 Aug 2025 12:09 PM IST
மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு ரெயில் மூலம் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு வடிவங்களில் 7 அடி உயரமுள்ள 3 சிலைகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் வீடுகளில் தரிசனம் செய்வதற்காக ஒன்றரை அடி உயரமுள்ள 26 சிலைகள் மும்பையில் தயார் செய்யப்பட்டு, தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புதுச்சேரி ரெயில் நிலையத்திற்கு வந்தன.
















