இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 April 2025 12:03 PM IST
எனக்கு பயம் கிடையாது - 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி பேட்டி
ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி அளித்த பேட்டியில், "இது மிகவும் நல்ல உணர்வு. இது ஐ.பி.எல்.-லில் எனது முதல் சதம். அதுவும் எனது மூன்றாவது இன்னிங்சிலேயே வந்தது சிறப்பானது. இந்த போட்டிக்கு முந்தைய என்னுடய பயிற்சியின் விளைவு இங்கே காட்டப்பட்டுள்ளது. நான் பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.
ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்வது நல்லது. அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்கிறார். மேலும் அவர் நேர்மறையான விஷயங்களை எனக்குள் செலுத்துகிறார். ஐ.பி.எல்.-லில் 100 ரன்கள் எடுப்பது கனவாக இருந்தது. இன்று அது நிறைவேறியுள்ளது. எனக்கு பயம் கிடையாது. நான் அதிகம் யோசிக்கவில்லை. நான் விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.
- 29 April 2025 12:02 PM IST
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு
5-வது நாளாக நேற்று இரவும் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
- 29 April 2025 11:59 AM IST
போதையின் பாதையில் திமுக யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம்: அதிமுக வலியுறுத்தல்
அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடுகள் நம்மை விட்டு கொஞ்சமும் நீங்கவில்லை. அதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று விளம்பர வீடியோ வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?.” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- 29 April 2025 11:57 AM IST
ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல். வரலாற்றில் 200+ ரன்களை இலக்கை வேகமாக கடந்த அணி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் குஜராத்துக்கு எதிராக 16 ஓவர்களில் 200+ ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது.
- 29 April 2025 10:58 AM IST
இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல.. இது தமிழ்நாடு.. சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது இது மணிப்பூரோ, காஷ்மீரோ அல்ல; இது தமிழ்நாடு மறந்துவிடாதீர்கள். உத்தரப்பிரதேச மாநில கும்பமேளாவில் நடைபெற்றது போன்று இங்கு உயிரிழப்புகள் நடைபெறவில்லை” என்று கூறினார்.
- 29 April 2025 10:43 AM IST
தமிழ்நாட்டில் 47 சதவீத உயர்கல்வி மாணவர் சேர்க்கை - முல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உயர்நிலைப் பள்ளி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடுநிலைப் பள்ளியில் இடைநிற்றலே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம்.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே 13.2 சதவீதம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெறும் 1.4 சதவீதம் தான். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக டாக்டர்கள், மருத்துவ மாணவர் இடங்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்” என்று அவர் கூறினார்.
- 29 April 2025 10:38 AM IST
கோடை வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? - எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவுறுத்தல்கள்
ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது. எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும்.
- 29 April 2025 10:35 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற 5-ஆம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நாளை (புதன்கிழமை) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 29 April 2025 10:18 AM IST
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1... சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் 7-ஆவது முறையாக திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் சீர்கேட்டால் ஊர்ந்துகொண்டிருந்த இழிவை மாற்றியிருக்கிறோம்
இதுவரை பார்த்திராத, இந்தியாவில் எந்த மாநிலமும் செய்திராத சாதனைகளை செய்துள்ளோம். இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக 9.6 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது
ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. தேசிய அளவிலான வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளது. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஒட்டுமொத்த அளவில் பாதி அளவை மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம், தேசிய அளவிலான சராசரி ரூ.2.60 லட்சம்.
மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள்; ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் கவர்னர், நிதி நெருக்கடி என பல தடைகளை தாண்டி சாதனை.. இது கட்சியின் அரசு அல்ல.. ஒரு கொள்கையின் அரசு என செயல்பட்டு வருகிறோம், இது தனிமனித சாதனை அல்ல, அமைச்சரவையின் சாதனை” என்று கூறினார்.
- 29 April 2025 10:04 AM IST
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: எவ்வளவு கூடியுள்ளது?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,980 க்கும். ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
















