நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளித்தார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பேசியதாவது;
”பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். நாளை நடைபெறும் கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த தொடக்கம் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்கும்.
தமிழகத்தில் பொதுமக்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது. இந்த அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் பணியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி. வலிமையான கூட்டணியாக விளங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். அப்போது தமிழகம் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும்.”
இவ்வாறு அவர் கூறினார்.






