விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: "அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.." - விஜய்

3வது கட்டமாக மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்,
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் விஜய் இந்த பணிகளை தொடங்கினார். தற்போது தொடர்ந்து 3-ம் ஆண்டாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் விருது அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வைரத்தில் பரிசு அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏற்கனவே 2 கட்டங்களாக பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் கடந்த மே 30ம் தேதி 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக பரிசு அளிக்கப்பட்டது. இதன்பின் ஜூன் 4ஆம் தேதி 84 தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 3வது கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார்.
முன்னதாக கல்வி விருது விழா தொடங்குவதற்கு முன்னர் நேற்று ஆமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், "குஜராத் ஆகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சில வீடியோக்கள், போட்டோக்களை பார்க்கும்போது மனம் பதறுகிறது.. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை" என்று கூறினார்.