கோவையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி தவறி விழுந்ததாக பீதியை கிளப்பிய வீடியோ

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோவையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி தவறி விழுந்ததாக பீதியை கிளப்பிய வீடியோ
Published on

கோவை,

உயிர்காக்கும் வாகனமாக ஆம்புலன்ஸ் வலம் வந்து கொண்டு இருக்கிறது. விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயால் துடிப்பவர்களை கோல்டன் ஹவர்ஸ் (பொன்னான நேரம்) என்று அழைக்கப்படும் முக்கிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் ஆம்புலன்ஸ் வந்தால் முன்னால் செல்பவர்கள் உடனடியாக வழிவிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. அதில் ஆம்புலன்ஸ் ஒன்று ரோட்டில் செல்வது போன்றும், அதன் பின்புறத்தில் உள்ள கதவு தானாக திறப்பது போன்றும், அதில் இருந்து நோயாளி ஸ்டெச்சரோடு ரோட்டில் விழுவது போன்றும் இருக்கிறது.

அத்துடன் அது கோவை மாவட்டம் அவினாசி சாலை என்றும், கோவையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இதனால் தமிழகத்தை எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பீதியை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவை உண்மை என்று பலர் நம்பி உள்ளனர்.

ஆனால் அது உண்மை இல்லை, ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. அந்த இடம் அவினாசி சாலையே இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் இதுபோன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரவவிட்டு வருகிறார்கள். அதை உண்மை என்று பலர் நம்பிவிடுகின்றனர். இதுபோன்று போலியான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com