‘எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில்

திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது; வலிமையோடு இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெரும். இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும். 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாங்கள் உறுதிபட தெரிவித்த நிலைப்பாடு சாதிய, மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.
அந்த கட்சியில் இடம்பெறும் கூட்டணியிலும் இருக்க மாட்டோம் என்று அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர வேண்டும் என்பது குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த கட்சியைத்தான் கூட்டணியில் சேர்க்க வேண்டும், இந்த கட்சியை சேர்க்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.விடம் சொல்லாது. எங்களுக்கு எந்த அதிகாரமும், உரிமையும் இல்லை.
எந்த கட்சியை வேண்டுமானாலும் தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்பதை தவிர தி.மு.க.வுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய இடத்தில் அல்லது நெருக்கடி தரக்கூடிய இடத்தில் நாங்கள் இல்லை. எந்த ஒரு கட்சி மீதும் தனிப்பட்ட வெறுப்பு எங்களுக்கு கிடையாது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்த்து போட்டியிடக் கூடிய வலிமை பெற்ற ஒரு கட்சியும் இல்லை. தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. வலிமையோடு இருக்கிறது. வெற்றிகரமாக இந்த தேர்தலை சந்திக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் இல்லை. ஆட்சி அதிகாரத்திற்காக தான் கட்சியை தொடங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.






